செய்திகள்

அலோக் வர்மா நீக்கத்திற்கு எதிர்ப்பு - சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

Published On 2018-10-25 08:31 GMT   |   Update On 2018-10-25 08:31 GMT
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. #CBIVsCBI #AlokVerma #CongressProtests
புதுடெல்லி:

சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.

சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.



இந்நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு கட்சியின் தலைவர்கள் நாளை போராட்டங்களை நடத்துவார்கள் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும், அலோக் வர்மாவை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என கட்சி வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். #CBIVsCBI #AlokVerma #CongressProtests

Tags:    

Similar News