செய்திகள்

பஞ்சாப் ரெயில் விபத்து திட்டமிட்டது அல்ல - மந்திரி நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

Published On 2018-10-20 03:42 GMT   |   Update On 2018-10-20 03:42 GMT
அமிர்தசரஸில் நடைபெற்ற ரெயில் விபத்துக்கு பல்வேறு விதங்களில் குற்றம் சுமத்தப்படும் பஞ்சாப் மாநில மந்திரி நவ்ஜோத் சிங் சித்து மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். #AmritsarTrainAccident
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் நேற்று இரவு தசரா விழா கோலகமால கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியின் போது, எதிர்ப்பாராதவிதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காங்கிரஸ் கட்சியினர் மீதும், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும், விபத்து நடைபெற்ற போது, அமைச்சரின் மனைவி உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இந்நிலையில், சிவில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், இது விபத்து என்பதை அனைவரும் உணரவேண்டும் எனவும், இது உள்நோக்கத்துடனோ, வேண்டும் என்றோ நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ரெயில் ஒலி எழுப்பாமல் வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள முதல்மந்திரி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #AmritsarTrainAccident
Tags:    

Similar News