செய்திகள்

டிட்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு நிவாரணமாக ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு

Published On 2018-10-13 23:36 GMT   |   Update On 2018-10-13 23:36 GMT
டிட்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். #TitliCyclone #ChandrababuNaidu #NaveenPatnaik
ஐதராபாத் :

வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது.

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர். ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டம், பராஹரா கிராமத்தில், கனமழையை தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, குகை ஒன்றில் தங்கியிருந்த 12 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை. அவர்கள், மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதிள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது :-

டிட்லி புயலால் ஆந்திராவில் 3 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில அரசு நிவாரணப்பணிகள் மேற்கொண்டு வருகின்றது. சுமார் 2800 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி வழங்க வேண்டும்

என சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கஞ்சம், கஜாபதி, ராயகாடா உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம் பகுதிகளில் உள்ள 4-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியாக தலா ரூ. 3000  அரசு சார்பில் வழங்கப்படும்.



நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணி துரிதமாக நடைப்பெற்று வருகிறது’ என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். #TitliCyclone #ChandrababuNaidu #NaveenPatnaik
Tags:    

Similar News