செய்திகள்

பத்ம விருதுகளுக்கு 50,000 பேர் விண்ணப்பம் - கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகம்

Published On 2018-10-12 12:11 IST   |   Update On 2018-10-12 12:11:00 IST
பத்ம விருதுகளுக்காக இந்த ஆண்டு 49 ஆயிரத்து 992 பேர் விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகமாகும். #PadmaAwards
புதுடெல்லி:

பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கும், சமூக சேவை செய்பவர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பத்மஸ்ரீ, பத்மபூ‌ஷன், பத்மவிபூ‌ஷன் ஆகிய பத்ம விருதுகளை பெறுவது கவுரவமிக்கதாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருது பெறுபவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்கிறது. இதற்காக பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற நடைமுறை உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு 1313 பேர் பத்ம விருதுக்காக விண் ணப்பித்திருந்தனர்.

2016-ம் ஆண்டு பத்ம விருது பெற விரும்பி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 768 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு அது 35 ஆயிரத்து 595 பேராக அதிகரித்தது.

2019-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. கடந்த மே 1-ந்தேதி விண்ணப்பம் பெறுவது தொடங்கியது. விண்ணப்பிக்க செப்டம்பர் 15-ந்தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று வரை விண்ணப்பித்தவர்கள் பற்றிய கணக்கீடு நடத்தப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டு 49 ஆயிரத்து 992 பேர் பத்ம விருதுகளுக்காக விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகமாகும்.



பத்ம விருதுகளுக்கு சாதனையாளர்களை பரிந்துரைக்கும் நடைமுறையும் அமலில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆன்-லைன் மூலமாகவும் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்ற வசதி கொண்டு வரப்பட்டது. அதன் பிறகே பத்ம விருதுக்காக விண்ணப்பிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது விண்ணப்பித்துள்ள 49,992 பேரின் மனுக்கள் ஆய்வு செய்யப்படும். அதில் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் விவரம் வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். #PadmaAwards

Tags:    

Similar News