செய்திகள்

மனைவியை கொன்ற வழக்கில் டி.வி. அறிவிப்பாளரின் ஆயுள்தண்டனை ரத்து- டெல்லி கோர்ட்டு உத்தரவு

Published On 2018-10-05 07:51 GMT   |   Update On 2018-10-05 08:06 GMT
டெல்லியில் மனைவியை கொன்ற வழக்கில் டி.வி. அறிவிப்பாளரின் ஆயுள்தண்டனையை ரத்து செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #delhicourt #lifesentence

புதுடெல்லி:

டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் வர்ணனையாளராக பணியாற்றியவர் சுகைப் இல்யாசி. இவர் ‘‘இண்டியாஸ் மோஸ்ட் வான்டெட்’’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனார்.

இவரது மனைவி அஞ்சு கிழக்கு டெல்லியில் வசித்து வந்தார். 18 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் சுகைப் இல்யாசி போலீசில் தெரிவித்து இருந்தார். ஆனால் விசாரணையில் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி சுகைப் இல்யாசி கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணைக்குப்பின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் சுகைப் இல்யாசிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இதற்கிடையே இல்யாசின் 2-வது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை கவனிப்பதற்காக 4 வாரம் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி இல்யாசியின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். #delhicourt #lifesentence

Tags:    

Similar News