செய்திகள்

நியூட்ரினோ வழக்கு: விளக்கம் அளிக்காத மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம்

Published On 2018-10-04 20:20 GMT   |   Update On 2018-10-04 20:20 GMT
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் மத்திய அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது. #Neutrino #NGT #NationalGreenTribunal #FederalGovernment
புதுடெல்லி:

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.

இந்நிலையில் டாட்டா நிறுவனம் மத்திய அரசிடம் புதிதாக ஒரு மனு சமர்ப்பித்தது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது.



இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு 4-ந்தேதி (நேற்று) விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பில் எந்த அதிகாரியும் ஆஜராகவில்லை. இதனால் விளக்கம் அளிக்காத மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து டாடா நிறுவனம் தரப்பில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்ட பிறகே ஆய்வு மையத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டது என வாதிடப்பட்டது.

மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பு வக்கீல் வாதிடுகையில், சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு நிறுவனத்தில் சிறப்பு நிபுணர்கள் கிடையாது. அதனால் அந்த நிறுவனத்திடம் மத்திய அரசு கருத்து கேட்கவில்லை. மேலும் இந்த திட்டத்துக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதி முடிவு எடுக்காத நிலையில் தமிழக அரசு எப்படி வனத்துறை நிலத்தை ஒதுக்கியது?. ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை இருக்கும்போது இந்த திட்டம் அதில் கூறப்பட்டு இருப்பதற்கு பாதிப்பு ஏற்படுத்தாதா?. அணுவை பல துகள்களாக சிதற அடிக்கும்போது சுற்றுச்சூழலும் பாதிப்பு அடையாதா?. இது தொடர்பாக மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஒரு மூத்த அதிகாரியோ, விஞ்ஞானியோ இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். டாடா நிறுவனமும் 8-ந்தேதிக்குள் எழுத்து வடிவில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.  #Neutrino #NGT #NationalGreenTribunal #FederalGovernment
Tags:    

Similar News