செய்திகள்
இமாச்சல் கனமழையில் சிக்கி மாயமான 35 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல்
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழையில் சிக்கி மாயமானதாக கூறப்பட்ட 35 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. #HimachalFloods #HimachalRains
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை ராணுவம் மீட்டு வருகிறது. காட்டாற்று வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரூர்கே ஐ.ஐ.டி.யில் இருந்து 35 மாணவர்கள் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள லகுல் மலையில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த 35 மாணவர்களும் திடீரென காணாமல் போய் விட்டனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
மேலும், 20 பேரும் நிலச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், மாயமான மாணவர்கள் உள்பட அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.