செய்திகள்

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் வழக்கு - இடைத்தரகரை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவு

Published On 2018-09-19 02:47 GMT   |   Update On 2018-09-19 02:47 GMT
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக கைது செய்யபட்ட கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #AgustaWestland #AgustaWestlandScam
புதுடெல்லி:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.362 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் வழங்கியதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டது. குறிப்பாக, தீர்ப்பில் தியாகியின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.பி.தியாகி உட்பட 14 பேர் மீது சிபிஐ-யும், 21 பேர் மீது அமலாக்கத் துறையும் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன. 



அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், 2008-ல் எழுதிய ஒரு கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் பின்னணியில், முக்கிய காரணியாக, 'சிக்னோரா காந்தி' செயல்பட்டதாக, குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே மைக்கேல்லுக்கு எதிராக அமலாக்கத்துறை 2016-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில், மைக்கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு துபாய் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் மைக்கேலை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக கிறிஸ்டியன் மைக்கேல் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதால், அவர் இந்தியா கொண்டு வரப்பட்டால், இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என நம்பப்படுகிறது. #AgustaWestland #AgustaWestlandScam #ChristianMichel

Tags:    

Similar News