செய்திகள்

இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் எம்.எல்.ஏ.க்கள் - ஆய்வில் தகவல்

Published On 2018-09-17 22:57 GMT   |   Update On 2018-09-17 22:57 GMT
இந்தியாவில் எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என கண்டறியப்பட்டு உள்ளது. #MLA #AverageIncome
கொல்கத்தா:

இந்தியாவில் பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆண்டு வருமானம் தொடர்பாக ‘தேசிய தேர்தல் கண்காணிப்பு’ மற்றும் ‘ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்’ ஆகியவை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. இந்த எம்.எல்.ஏ.க்கள் வழங்கிய பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் உள்ள 4086 எம்.எல்.ஏ.க்களில் 3145 பேர் இந்த பிரமாண பத்திரங்களை வழங்கி உள்ளனர். அவற்றை ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதில் முக்கியமாக, இந்த எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட ஆண்டு வருமானம் குறித்த தகவல்களை அந்த அமைப்புகள் வெளியிட்டு உள்ளன.

அதன்படி, இந்த எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக தென் பிராந்தியத்தை சேர்ந்த 711 எம்.எல்.ஏ.க்களின் சராசரி வருமானம் ரூ.51.99 லட்சமாகவும், குறைந்தபட்சமாக கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த 614 எம்.எல்.ஏ.க்களின் வருமானம் ரூ.8.53 லட்சமாகவும் இருக்கிறது.

மாநிலங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக கர்நாடகாவின் 203 எம்.எல்.ஏ.க்கள் சராசரியாக ரூ.1.11 கோடி சம்பாதிக்கின்றனர். குறைந்தபட்சமாக சத்தீஷ்காரின் 63 எம்.எல்.ஏ.க்கள் ரூ.5.4 லட்சம் பெறுகிறார்கள்.

இந்த எம்.எல்.ஏ.க்களின் கல்வித்தகுதியை பொறுத்தவரை, 1052 (33 சதவீதம்) பேர் 5 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வித்தகுதியை கொண்டுள்ளனர். இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.31.03 லட்சமாக உள்ளது. பட்டதாரி மற்றும் கூடுதல் தகுதியை பெற்றிருக்கும் 1997 (63 சதவீதம்) எம்.எல்.ஏ.க்கள், ரூ.20.87 லட்சம் பெறுகின்றனர்.

வெறும் 8-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றுள்ள 139 எம்.எல்.ஏ.க்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.89.88 லட்சம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது. #MLA #AverageIncome
Tags:    

Similar News