செய்திகள்

கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்

Published On 2018-09-16 15:14 GMT   |   Update On 2018-09-16 15:14 GMT
கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக கருத்து கேட்ட பத்திரிகையாளரிடம் எரிந்து விழுந்ததற்காக நடிகர் மோகன் லால் மன்னிப்பு கேட்டார். #Mohanlalapologises #Mohanlaljourno
திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான மோகன் லால் விஸ்வசாந்தி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். 

கேரள மாநிலத்தில் பல்வேறு சமூகநலச் சேவைகளில் விஸ்வசாந்தி அறக்கட்டளையின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்களுக்கான புதிய மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தை புனரமைப்பதற்காக  வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் பங்கேற்கும் வட்டமேஜை கருத்தரங்கம் ஒன்றுக்கும் மோகன் லால் ஏற்பாடு செய்தார்.

கேரள வெள்ள நிவாரணத்துக்கு பொருட்களை அனுப்புவது தொடர்பாக நேற்று விஸ்வசாந்தி அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு மோகன் லால் பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது, கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் எரிச்சல் அடைந்த மோகன் லால் அந்த செய்தியாளரை கடிந்து கொண்டார்.

வெள்ள நிவாரண உதவி செய்வது தொடர்பான உன்னத நோக்கம் பற்றி பேசி கொண்டிருக்கும்போது, இதைப்போன்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? வெள்ள நிவாரணத்துக்கும் கன்னியாஸ்திரி புகாருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று மோகன் லால் எதிர் கேள்வி கேட்டார். 

இந்த விவகாரம் செய்தியாக வெளியானதும் சமூக வலைத்தளங்களில் மோகன் லாலுக்கு எதிராக பலர் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டனர். 
    
இதைதொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மோகன் லால் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார். சமயம் அறியாமல் அந்த பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி தன்னை கோபப்படுத்தியதாக அவர் குறிப்பிடுள்ளார்.

‘அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி கேரள மாநிலத்தில் தற்போது மிகுந்த பரபரப்புக்குள்ளான ஒரு விவகாரம் தொடர்பானதுதான். ஆனால், அப்போது அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையில் நான் இல்லை. நான் வேறொரு மனநிலையில் இருந்ததால் நிருபருக்கு அப்படி பதில் அளிக்க நேர்ந்தது.

ஒரு நிறுவனத்தையோ, பத்திரிகையாளர்களையோ, தனிநபரையோ அவமதிக்கும் வகையில் நான் அப்படி பதில் அளிக்கவில்லை. எனது பதிலால் அந்த கேள்வியை எழுப்பியவரின் மனம் காயப்பட்டிருந்தால், தயவு செய்து என்னை உங்களது மூத்த சகோதரராக நினைத்து எனது மன்னிப்பை ஏற்குமாறு கேட்டு கொள்கிறேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Mohanlalapologises #Mohanlaljourno
Tags:    

Similar News