செய்திகள்

கர்நாடகாவில் சோகம் - வேன் மீது லாரி மோதியதில் 5 பேர் பலி

Published On 2018-09-16 05:42 IST   |   Update On 2018-09-16 05:42:00 IST
கர்நாடாகாவின் கார்வார் பகுதியில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் தாய், மகள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தின் ஒன்னாவர் தாலுகா கர்கிமடம் வழியாக எடப்பள்ளி-பன்வேல் தேசிய நெடுஞ்சாலை 66 செல்கிறது.

இந்தப் பகுதியில் நேற்று மாலை பயணிகளை ஏற்றிக் கொண்டு குமட்டாவில் இருந்து ஒன்னாவர் நோக்கி ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு லாரி வேன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்தில் ஒரு சிறுமி, 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த ஒன்னாவர் போலீசார் அங்கு சென்று விபத்தில் பலியானோர் உடல்களை கைப்பற்றினர். அவர்கள் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
Tags:    

Similar News