செய்திகள்

பாலியல் பலாத்கார வழக்கு: விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு

Published On 2018-09-06 22:28 GMT   |   Update On 2018-09-06 22:28 GMT
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #Nithyananda
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கு, கார் டிரைவர் லெனின் கருப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 8 வழக்குகள் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா சாமியார் தாக்கல் செய்த மனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகளை விசாரிக்க ராமநகர் மாவட்ட கோர்ட்டுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பிறகு, நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட கோர்ட்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி நடந்த விசாரணையின் போது ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நித்யானந்தா சாமியார் ஆஜராகி இருந்தார். அதன்பிறகு, 2 முறை நடந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்றும் நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி கோபால கிருஷ்ணராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல், நித்யானந்தா சாமியார் வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

தொடர்ந்து 3 முறை நடந்த விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நித்யானந்தா சாமியாரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #Nithyananda
Tags:    

Similar News