செய்திகள்

எஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய பந்த் - மத்திய பிரதேசத்தில் 144 தடை உத்தரவு

Published On 2018-09-06 06:43 GMT   |   Update On 2018-09-06 06:43 GMT
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct
புதுடெல்லி:

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்து இருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது.



இந்த நிலையில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளன. உயர்ஜாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் டயர்களை சாலையில் கொளுத்திப்போட்டும், மரங்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பதற்றம் நிறைந்த 35 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிற்பகல் 2 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பீகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் டெர்மினல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct

Tags:    

Similar News