செய்திகள்

உ.பி.யில் தொடரும் கனமழை - பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

Published On 2018-09-05 13:18 GMT   |   Update On 2018-09-05 13:18 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. #UPHeavyRain
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையில் சிக்கி 18 பேர் பலியாகினர். 

இந்நிலையில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரில் உள்ள கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் அபாய கட்ட அளவை தாண்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கான்பூரில் கங்கை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதுதொடர்பாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். #UPHeavyRain
Tags:    

Similar News