செய்திகள்
தங்க நெக்லசுடன் காட்சியளிக்கும் மாதா சிலை.

மாதாவுக்கு காணிக்கையாக வழங்கிய 25 பவுன் நெக்லசை வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய ஆலயம்

Published On 2018-09-05 05:00 GMT   |   Update On 2018-09-05 05:00 GMT
கொச்சியை அடுத்த மஞ்சுமால் பகுதியில் உள்ள இமாக்குலேட் மாதா ஆலய நிர்வாகம், மாதாவுக்கு காணிக்கையாக வந்த 25 பவுன் தங்க நகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளனர். #KeralaFloodRelief
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த மாதம் பெய்த பெருமழையால் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது.

கேரளாவின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். சினிமா நடிகர், நடிகைகளும் வெள்ள நிவாரண நிதி வழங்கி உள்ளனர். ஏழை, எளிய மக்களும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கொச்சியை அடுத்த மஞ்சுமால் பகுதியில் உள்ள இமாக்குலேட் மாதா ஆலய நிர்வாகம், மாதாவுக்கு காணிக்கையாக வந்த தங்க நகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளனர்.

இந்த மாதா சிலை 19-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் இருந்து கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அதனை மஞ்சுமாலில் உள்ள ஆலயத்தில் நிறுவினர். ஆலயத்திற்கு வரும் மக்கள் மாதாவுக்கு காணிக்கையாக தங்க நகைகளும், வெள்ளிப் பொருட்களும் வழங்கினர்.

இதில் மாதாவுக்கு 25 பவுன் எடையில் தங்க நெக்லஸ் செய்யப்பட்டு மாதாவின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. தற்போது கேரளாவில் ஏற்பட்ட சேதங்களுக்காக திரட்டப்படும் நிவாரண நிதிக்கு இந்த தங்க நெக்லசை வழங்க ஆலய நிர்வாகம் முன் வந்தது.

இதுபற்றி ஆலய பங்கு தந்தை வர்க்கீஸ் தனிச்சக்காட்டு கூறும்போது, மாதா அணிந்த நகையை நன்கொடையாக வழங்க முன் வந்தது மூலம் மற்றவர்களும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தாராளமாக உதவுவார்கள் என்று நம்புகிறோம். மாதா ஆலயம் அமைந்துள்ள மஞ்சுமால் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இங்கு நிவாரண பணிகளுக்காக நாங்கள் இதனை நன்கொடையாக வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வாரப்புழா ஆர்ச் டயோசீஸ் ஆயரும் அவரது அதிகாரத்தின் கீழ் வரும் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும் விழாக்களை ரத்து செய்து விட்டு அதற்கான பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் ஆயர் பயன்படுத்தி வந்த காரையும் ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.  #KeralaFloodRelief
Tags:    

Similar News