செய்திகள்

அரசு பணி தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது - 11 பேர் கைது

Published On 2018-09-02 22:23 GMT   |   Update On 2018-09-02 22:23 GMT
அரசு பணி தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் வெளியானது தொடர்பாக 11 பேரையும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். #UPSSSCExam #PaperLeak
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் அரசு பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. 500 காலியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு நேற்று நடக்க இருந்தது. இந்த நிலையில் இந்த தேர்வுக்குரிய வினாத்தாள் நேற்று முன்தினமே சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் தேர்வை ஒத்திவைத்த மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வுக் கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக, மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 11 பேரை கொண்ட குழு ஒன்று வினாத்தாளை திருடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்களில் 5 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மீரட் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 11 பேரையும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு வினாத்தாளை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை அவர்கள் விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.  #UPSSSCExam #PaperLeak 
Tags:    

Similar News