செய்திகள்

ஆர்.டி.ஐ. மூலம் தகவல் அறியவும் 7 ரூபாய் ஜி.எஸ்.டி. வரி - அதிர்ச்சியில் மனுதாரர்

Published On 2018-09-02 10:09 GMT   |   Update On 2018-09-02 10:09 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக பெறப்படும் பிரதிகளுக்கான விலையில் 36 ரூபாய்க்கு 7 ரூபாய் ஜி.எஸ்.டி. வரி சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. #GSTforRTI
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான அஜய் துபே என்பவர் அம்மாநிலத்தின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை முகமை அலுவலக கட்டுமானப்பணிகளுக்கு ஆன செலவினங்களின் மொத்த தொகை எவ்வளவு? என்பதை அறிந்துகொள்ள விரும்பி, தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக இதற்காக மனு செய்தார்.

அவருக்கான பதிலாக 18 பக்கங்களை கொண்ட செலவு கணக்கு அளிக்கப்பட்டது. இதற்காக ஒரு பக்கத்துக்கான ஜெராக்ஸ் கட்டணமாக 2 ரூபாய் என்ற விகிதத்தில் 18 பக்கங்களுக்கு 36 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டது.

மேலும், இந்த 36 ரூபாய்க்கு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 50 காசுகளும், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 50 காசுகளும் சேர்த்து மொத்தம் 43 ரூபாய் செலுத்த வேண்டும் என அம்மாநில தகவல் அறியும் உரிமை ஆணையாளர் அலுவகம் தெரிவித்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுநன்மைக்காக தகவல் அறியும் சட்டம் மூலம் சில விபரங்களை பெறுவதற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக மேலிடத்தில் முறையீடு செய்யப்போவதாக மனுதாரரான அஜய் துபே குறிப்பிட்டுள்ளார். #GSTforRTI #GSTforinformation
Tags:    

Similar News