செய்திகள்

வெள்ள நிவாரண பணிக்கு 14 நாடுகளில் நிதி திரட்ட கேரள மந்திரிகள் பயணம்

Published On 2018-09-01 09:47 GMT   |   Update On 2018-09-01 09:47 GMT
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மலையாளிகளிடம் கேரள பேரிடருக்கு நிதி உதவி பெற கேரள மந்திரிகள் வெளிநாடு செல்ல உள்ளனர். #KeralaRain #KeralaFloods
திருவனந்தபுரம்:

கேரளாவில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீண்டு வர சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

கேரளாவில் மழை சேதம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை திரட்டும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. மாநில முதல்-மந்திரி வெள்ள நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

இதுவரை ரூ.1000-ம் கோடிக்கும் மேல் நிவாரண நிதி திரண்டு உள்ளது. நேற்றும் நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, லிசி ஆகியோர் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து ரூ.40 லட்சம் நிதி வழங்கினர்.

கேரளாவிற்கு பல்வேறு வெளிநாடுகளும் நிதி உதவி செய்ய முன் வந்தன. ஆனால் வெளிநாட்டு நிதி உதவியை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது. எனவே மாநில அரசு வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் கேரள வெள்ள நிவாரணப் பணிக்கு தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுபோல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மலையாளிகள் கூட்டமைப்புகளும் வெள்ள நிவாரண பணிக்கு உதவி செய்ய வேண்டும் என்று இக்கோரப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான மலையாளிகள் வசிக்கிறார்கள். அவர்கள் கேரள பேரிடருக்கு தாராளமாக உதவ வேண்டும். அவர்களிடம் உதவி பெற கேரள மந்திரிகள் வெளிநாடு செல்ல உள்ளனர்.

குறிப்பாக மலையாளிகள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், ஒமான், பக்ரைன், சவுதி அரேபியா, கத்தார், குவைத், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு மந்திரிகள் செல்கிறார்கள். இவர்களுடன் அதிகாரிகளும் செல்ல இருக்கிறார்கள். இதன் மூலம் கேரள மறுசீரமைப்பு பணிக்கு கூடுதல் நிதி திரட்ட முடியும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #KeralaFloods
Tags:    

Similar News