செய்திகள்

தீவிர உணவு பிரியர் வாஜ்பாய்

Published On 2018-08-17 09:41 GMT   |   Update On 2018-08-17 09:41 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீவிர உணவு பிரியர் ஆவார். அவருடன் பணியாற்றிய அதிகாரிகளும், நெருக்கமான பத்திரிகையாளர்களும் இதுபற்றிய சுவையான தகவல்களை நினைவுகூர்ந்துள்ளனர். #AtalBihariVajpayee
புதுடெல்லி:

மத்திய மந்திரிசபை கூட்டங்களில் கூட வாஜ்பாய் உப்புக்கடலையை கொறித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு தடவையும் தட்டு நிறைய அதை நிரப்பி வைக்க வேண்டும். கூட்டம் முடிவடையும்போது, தட்டு காலியாகி இருக்கும்.

வாஜ்பாய்க்கு இனிப்புகளும், கடல் உணவுகளும் குறிப்பாக இறால் மிகவும் பிடிக்கும். எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் புகழ்பெற்ற உணவு வகைகளை கேட்டு வாங்கி சாப்பிடுவார்.

வாஜ்பாயின் சீடரான லால்ஜி தாண்டன், லக்னோவில் இருந்து கபாப் உணவுவகைகளை வாங்கி வந்து தருவார்.

மத்திய மந்திரி விஜய் கோயலுக்கு பழைய டெல்லியில் இருந்து சாட் உணவுவகைகளை வாங்கி வரும் பொறுப்பு.

தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திராவில் இருந்து இறால் வாங்கி வருவார்.

ஏராளமான மசாலாவுடன் பக்கோடா சாப்பிடுவதும், மசாலா டீ அருந்துவதும் வாஜ்பாய்க்கு பிடித்தமான வி‌ஷயம்.

ஒருமுறை அரசாங்க விருந்தின்போது, உணவு பகுதியில், குலாப் ஜாமுன் உள்ளிட்ட இனிப்புவகைகள் அணிவகுத்து இருந்ததை பார்த்தவுடன், வாஜ்பாய் அந்த பகுதிக்கு நகர்ந்தார்.

அதை பார்த்து கவலை அடைந்த அதிகாரிகள், ஒரு தந்திரம் செய்தனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மாதுரி தீட்சித்தை வாஜ்பாய்க்கு அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு மாதுரி தீட்சித்துடன் திரையுலகம் குறித்து வாஜ்பாய் உரையாடத் தொடங்கினார். அந்த இடைவெளியில், இனிப்புவகைகளை அங்கிருந்து மறைத்து விட்டனர், அதிகாரிகள்.

வாஜ்பாய்க்கும் நன்றாக சமைக்கத் தெரியும். தன்னை சந்திக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு அவரே ஏதேனும் ஒரு உணவுவகையை சமைத்து வழங்குவார். அது பெரும்பாலும் இனிப்புவகையாகவோ அல்லது அசைவமாகவோ இருக்கும்.



உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட வாஜ்பாய் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர்.  #AtalBihariVajpayee
Tags:    

Similar News