செய்திகள்

மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் - 6 மாநிலங்களில் நாளை முதல் அமல்

Published On 2018-08-14 13:01 IST   |   Update On 2018-08-14 13:01:00 IST
மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் சுதந்திர தின விழாவையொட்டி 6 மாநிலங்களில் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. #Medicalinsurance

புதுடெல்லி:

இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அமல் படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி பல நோய்களுக்கு குறிப்பிட்ட தொகை வரை செலவு செய்து சிகிச்சை பெற்று கொள்ளலாம். அந்த பணம் காப்பீட்டு திட்டத்தில் இருந்து வழங்கப்பட்டு விடும்.

இதேபோன்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது.

இதன்படி நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு குறிப்பிட்ட தொகை வரை சிகிச்சை அளிக்க மத்திய அரசே பணம் செலுத்தும். இதற்காக நியமிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டத்துக்கு ஆயுஸ் மேன் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டு இருந்தது. இதை அமல்படுத்துவதற்காக ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி செலவிடுவதற்கும் அரசு திட்டங்களை தயாரித்தது.

இதையடுத்து 6 மாநிலங்களில் முதற்கட்டமாக திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். சுதந்திர தின விழாவையொட்டி நாளை இந்த திட்டம் 6 மாநிலங்களில் அமலுக்கு வர உள்ளது.

சத்தீஷ்கார், மணிப்பூர், அரியானா, குஜராத், மேற்கு வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அமல்படுத்த உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் வெளியிட உள்ளார்.

மேலும் இந்த திட்டத்தில் பல மாற்றங்களையும் செய்துள்ளனர். திட்டத்துக்கு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய அபியான் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.


அதுபற்றியும் அவர் அறிவிக்கிறார். அடுத்த கட்டமாக அக்டோபர் மாதம் 2-ந் தேதி மற்ற மாநிலங்களிலும் இத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

நாளை 6 மாநிலங்களில் அமலுக்கு வருவதையடுத்து திட்ட நடைமுறைகளை செயல்படுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்து பூ‌ஷன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர், இது பற்றி சுகாதாரத்துறையிடமும், சம்பந்தப்பட்ட மற்ற அமைப்புகளிடமும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் இந்த திட்டத்தை எப்படி அமல்படுத்துவது? என்பது பற்றியும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களில் ஏற்கனவே உள்ள காப்பீட்டு திட்டங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களே நேரடியாண பணம் செலுத்துகிறது. ஆனால், மத்திய அரசு திட்டத்தின்படி இதில் காப்பீட்டு நிறுவனங்கள் சம்பந்தப்படவில்லை.

மத்திய அரசே அதற்கான நிதியை ஒதுக்கி நேரடியாக வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக நாடு முழுவதும் 22 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. அங்கு சிகிச்சை பெற்று கொண்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டுக்கு 10 கோடி குடும்பத்தினர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் மோசடிகளோ, தவறுகளோ நடந்து விடாமல் தடுக்கும் வகையில் அதற்காக சில வரைமுறைகளையும் உருவாக்கி உள்ளனர். இதற்காக தகவல் தொழில் நுட்ப முறையில் பயனாளிகள் பதிவு செய்யப்படுவார்கள்.

திட்டத்தின் நடை முறைகளும் அதில் பதிவு செய்யப்படும். அந்த பணி டாட்டா கன்சல் டன்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய தகவல் மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து டாட்டா நிறுவனம் இந்த பணிகளை செய்யும்.

திட்டத்துக்கான ஆலோசனைகளை தேசிய ஆதார் நிறுவனத்தின் சேர்மன் சத்திய நாராயணா வழங்கி வருகிறார்.

திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளையும் வகுத்துள்ளனர். இதன்படி ரூ.5 லட்சம் வரை ஒரு குடும்பத்துக்கு மருத்துவ வசதிகளை பெற்று கொள்ள முடியும்.

விரைவில் 4 மாநில சட்டசபை தேர்தலும், அதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளன. மருத்துவ திட்டத்தின் மூலம் மக்களின் ஆதரவை தங்கள் பக்கம் ஈர்க்க முடியும் என்று பாரதிய ஜனதா கருதுகிறது. #Medicalinsurance

Tags:    

Similar News