செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் அடைமழையால் வெள்ளப்பெருக்கு - நிலச்சரிவு: 16 பேர் உயிரிழப்பு

Published On 2018-08-14 09:38 IST   |   Update On 2018-08-14 09:38:00 IST
இமாச்சல பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடைமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். #HimachalPradeshRain #HeavyRaininHimachal
சிம்லா:

வடமாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான இமாச்சல பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் முகிற்பேழ் மழை எனப்படும் இடைவிடாத அடைமழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துக்களில் 16 பேர் பலியாகி உள்ளனர்.



இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வானிலை மைய அறிக்கையின்படி, சஜன்பூர் திரா பகுதியில் ஒரே நாளில் 307 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1901ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் 277 மிமீ மழை பெய்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.

இதுதவிர இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மட்டும் 73.8 மிமீ மழை பெய்துள்ளது. இது 7 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை ஆகும். இதற்கு முன்பு 2011ல் ஆகஸ்ட் 13-ம் தேதி 75 மிமீ மழை பெய்திருந்தது.

லகால், ஸ்பிட்டி மாவட்டங்கள் தவிர மற்ற 11 மாவட்டங்களிலும் இயல்பு நிலையை விட அதிக அளவில் மழை பெய்துள்ளதாக வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். #HimachalPradeshRain #HeavyRaininHimachal
Tags:    

Similar News