செய்திகள்
தம்பானூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி கிடக்கும் காட்சி.

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு - கேரளாவில் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை

Published On 2018-08-07 07:36 GMT   |   Update On 2018-08-07 07:36 GMT
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கேரளாவில் பஸ், ஆட்டோக்கள் இயங்கவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
திருவனந்தபுரம்:

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் மோட்டார் வாகன தொழில் முழுமையாக கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் சென்று விடும் என்று தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே இந்த சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி இன்று போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. பஸ், டாக்சி, ஆட்டோ போன்ற வாகனங்கள் இன்று இயங்காது என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று இந்த போராட்டம் நடைபெற்றது. கேரளாவிலும் இந்த போராட்டம் காரணமாக பஸ், டாக்சி, ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. அரசு பஸ்களும் ஓடாததால் அவை டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

கேரளாவில் அதிகளவில் ஆட்டோக்கள் உள்ளன. பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக பலரும் ஆட்டோக்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். சரியான கட்டணத்தை ஆட்டோக்கள் வசூலிப்பதால் எப்போதும் சாலைகளில் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வண்ணம் இருக்கும்.

இன்று போராட்டம் காரணமாக ஆட்டோ சேவை முழுமையாக முடங்கியது. இதனால் ஆட்டோக்களை நம்பி பயணம் செய்ய வந்தவர்கள் கடும் பாதிப்படைந்தனர்.

திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் பஸ்கள் எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த போராட்டம் பற்றி தெரியாத பொதுமக்கள் பஸ்சுக்காக இங்கு வந்து விட்டு ஏமாற்றமடைந்தனர்.

பஸ்கள் ஓடாததால் அவர்கள் ரெயில் மூலம் அலுவலகம் மற்றும் தங்கள் அவசர பணிகளுக்காக பயணம் மேற்கொண்டனர். இதனால் தம்பானூர் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில்களில் கூட்ட நெரிசலும் அதிகமாக இருந்தது.

கேரளாவில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் வாகன ரோந்தும் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் கேரள எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பல்வேறு பணிகள் காரணமாக கேரள சென்ற குமரி மாவட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

Tags:    

Similar News