செய்திகள்

கர்நாடக அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் 1,600 செவிலியர்கள் நியமனம்- மந்திரி சிவானந்தபட்டீல் தகவல்

Published On 2018-08-05 21:27 GMT   |   Update On 2018-08-05 21:27 GMT
கர்நாடக அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் 1,600 செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி சிவானந்தபட்டீல் கூறினார். #sivanandapatel #KarnatakaGovernmenthospital
பெங்களூரு:

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி சிவானந்தபட்டீல் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஏழை மக்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியாக பொது சுகாதார சேவைக்காக மாநில அரசு சார்பில் ‘கர்நாடக சுகாதார அட்டை’ எனப்படும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் மக்கள் குழப்பம் அடைய தேவை இல்லை. அந்த மருத்துவ காப்பீட்டு அட்டைகள் இல்லாவிட்டாலும் தகுதியானவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

மாநில அரசின் அனைத்து மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் இந்த கர்நாடக சுகாதார திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு அட்டைகளை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு. 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் விநியோகம் செய்யப்படும்.

கர்நாடகத்தில் முதல் கட்டமாக 10 முக்கியமான மருத்துவமனைகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த கர்நாடக சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். மத்திய அரசின் ஆயுஸ்மான் திட்டத்துடன் இந்த கர்நாடக சுகாதார திட்டத்தை ஒருங்கிணைக்கும் திட்டம் உள்ளது. ஆயுஸ்மான் திட்டத்தில் நோயாளிகள் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்.

அவ்வாறு இரு திட்டங் களும் ஒருங்கிணைக்கப்பட்டால் தகுதியான ஏழை நோயாளிகள் ரூ.7 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். அரசு ஆஸ்பத்திரிகளில் 380 மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 180 டாக்டர்கள் தங்களின் பணியை தொடங்கிவிட்டனர். கர்நாடகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் 1,600 செவிலியர்களை நியமனம் செய்ய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

விரைவில் அந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை படிப்படியாக நீக்கப்படும். மாநிலத்தில் டெங்கு, மலேரியா நோய் பரவும் பகுதிகளில் அதிக கண்காணிப்பில் ஈடுபடும்படி டாக்டர்களுக்கு உத்தர விட்டுள்ளேன்.

இவ்வாறு சிவானந்த பட்டீல் கூறினார். #sivanandapatel #KarnatakaGovernmenthospital
Tags:    

Similar News