செய்திகள்

அசாமில் குடியுரிமை பட்டியல் வெளியிடப்பட்டதால் பதட்டம்

Published On 2018-07-30 12:22 IST   |   Update On 2018-07-30 13:36:00 IST
அசாமில் குடியுரிமை பட்டியல் வெளியிடப்பட்டதும் பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #AssamCitizenship

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 3 கோடிய 29 லட்சம். ஆனால் இதில் பெரும்பாலோர் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து குடியேறியவர்கள்.

அவர்களை இந்திய குடிமகன்களாக கருதக் கூடாது என உள்ளூர் மக்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் அசாமில் பல தடவை கலவரம் ஏற்பட்டுள்ளது.

இதில் யார் உண்மையான இந்திய குடிமகன் என்பதை கண்டறிய ஏற்கனவே 1951-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனாலும் அது முழுமை பெறவில்லை. 1951-க்கு பிறகும் ஏராளமான வங்காளதேசத்தினர் அசாமில் ஊடுருவினார்கள்.

இதைத்தொடர்ந்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 25.3.1971 அன்று வரையிலும் அசாமில் குடியுருப்பதற்கான உரிய சான்றுகளை அளித்தால் அவர்கள் இந்திய குடிமகனாக கருதப்படுவார்கள் என்று இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கணக்கெடுப்பு பணி முடிந்து கடந்த ஜனவரி மாதம் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 1 கோடியே 90 லட்சம் பேர் அசாம் குடிமகன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. 1 கோடியே 40 லட்சம் பேர் பெயர் அதில் இடம்பெறவில்லை. அவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உரிய சான்றிதழ்கள் அளித்தால் மறுபடியும் சேர்த்து இறுதி பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இறுதி பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு பட்டியல் இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டது. மேலும் அனைத்து பகுதிகளில் உள்ள கணக்கெடுப்பு மையங்களிலும் அவற்றை வெளியிட்டனர். பட்டியலில் இடம்பெறாத நபர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என கருதப்பட்டதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

22 ஆயிரம் மத்தியபடை போலீசாரும் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டியல் வெளியிடப்பட்டதும் பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது.

அங்குள்ள பர்பேட்டா, தாரங், திமாஹாசோ, சோனித்பூர், கரிம்கஞ்ச், கோலாகட், துப்ரி ஆகிய மாவட்டங்கள் பதட்டம் நிறைந்த இடமாக அடையாளம் காணப்பட்டது. அந்த மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் மக்கள் அமைதிகாக்க வேண்டும். இந்த பட்டியலில் பெயர் இடம்பெறாவிட்டாலும் கூட இன்னும் வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் முறைப்படி மீண்டும் விண்ணப்பித்து குடியுரிமை பட்டியலில் இடம்பெறலாம் என்று கூறியுள்ளார்.

இன்றைய பட்டியலில் இடம்பெறாதவர்கள் வருகிற 7-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 28-ந்தேதி வரை அதற்கான விண்ணப்பத்தில் மீண்டும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஆதாரங்களை கொடுத்து அவர்கள் குடியுரிமை பட்டியலில் சேர்க்க வற்புறுத்தலாம். அதன்பிறகும் அவர்கள் பட்டியலில் இடம்பெறா விட்டால் வெளிநாட்டினராக கருதப்படுவார்கள்.#AssamCitizenship

Tags:    

Similar News