செய்திகள்

26 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை

Published On 2018-07-29 18:48 GMT   |   Update On 2018-07-29 18:48 GMT
26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. #IdukkiDam
இடுக்கி:

26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே அணையில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்திலேயே பெரிய அணையான இடுக்கி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் கரையோர பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் மின்சாரத்துறை மந்திரி எம்.எம்.மணி, வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குரியன், இடுக்கி மாவட்ட கலெக்டர் ஜீவன்பாபு உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது, தண்ணீர் செல்லும் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெரியார், செருதோணி ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இடுக்கி அணையின் மொத்த உயரமான 554 அடியில், நேற்று முன்தினம் நிலவரப்படி 552 அடி வரை தண்ணீர் இருந்தது. இதனால் அணையில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தண்ணீர் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 553 அடியாக உயர்ந்தது. இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு அணை நிரம்பியது. இதனால் 26 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் இடுக்கி அணையின் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பெரியார், செருதோணி ஆறுகளின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அணை திறந்தவுடன் வெளியேறும் தண்ணீர், அணையின் நீர்வரத்து ஆகியவற்றை ஆய்வு செய்த பின்புதான், அடுத்தக்கட்ட நீர்திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும் அணை திறந்தால் சுற்றுலா பயணிகள் அணைப்பகுதிக்கு சென்று பார்வையிட அனுமதி மறுக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தண்ணீர் செருதோணி, பெரியார் ஆறுகள் வழியாக லோயர்பெரியார் ஹாம்லா அணையில் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து நேரியமங்கலம், மலையாற்றூர், காலடி, பல்லார்பாடம், முளவுகாடு, பொன்னாரிமங்கலம் சென்று ஆலுவா ஆற்றில் கலந்து அரபிக்கடலில் சங்கமிக்கும். 
Tags:    

Similar News