செய்திகள்

தவறான தகவலை பதிவு செய்த சஞ்ஜு படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் - தாதா அபு சலீம் நோட்டீஸ்

Published On 2018-07-27 06:01 GMT   |   Update On 2018-07-27 06:01 GMT
தன்னை பற்றிய தவறான தகவலை சஞ்ஜு திரைப்படத்தில் பதிவு செயததற்காக படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாதா அபு சலீம் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளான். #Sanjumovie #1993mumbaiblast
மும்பை :

நாட்டையே உலுக்கிய 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். மேலும், 700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் நாட்டில் பதுங்கியிருப்பதாக இந்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

மும்பை குண்டுவெடிப்புக்கு, வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களை  வழங்கியதாக தாதா அபு சலீம் என்பவனுக்கு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இவன் தாவூத் இப்ராகிம் சகோதரர் அனிஸ் இப்ராகிமின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வழக்கில், பிரபல இந்தி திரைப்பட்ட நடிகர் சஞ்சய் தத் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தாக கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், நல்லொழுக்கம் காரணமாக தண்டனை காலம் முடிவடையும் முன்னரே அவர் சிறையில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.



சமீபத்தில், பாலிவுட் இயக்குனர் ராஜேஷ் ஹிரானி இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் ’சஞ்ஜு’ என் பெயரிடப்பட்ட சஞ்சய் தத்தின் வாழ்க்கைப் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் ரூ.300 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்த கொந்தளிப்பான நாட்களில்  சஞ்சய் தத்(ரன்பீர் கபூர்), அபு சலீமிடம் இருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கியை நேரில் வாங்குவது போல் ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது.  

இந்நிலையில், சஞ்ஜு படக்குழுவினருக்கு சிறையில் உள்ள தாதா அபு சலீம் இன்று வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளான். அதில், ‘நான் சஞ்சய் தத்தை நேரில் சந்திக்கவே இல்லை, என்னை பற்றிய தவறான தகவல்கள் சஞ்ஜு திரைப்பட்டத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே, இந்த முரண்பாடுகளுக்கு படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோரவில்லை என்றால் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News