செய்திகள்

விமானத்தில் பெற்ற குழந்தையை கழிவறையில் வீசிவிட்டு சென்ற விளையாட்டு வீராங்கனை

Published On 2018-07-26 04:34 GMT   |   Update On 2018-07-26 04:34 GMT
டெல்லிக்கு வந்த ஏர்-ஆசியா விமானத்தில் 19 வயது விளையாட்டு வீராங்கனை பெற்ற குழந்தையை கழிவறையில் வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #AirAsia
புதுடெல்லி:

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஏர்-ஆசியா விமானம் வந்தது. அந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமான ஊழியர்கள் கழிவறையில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பிறந்து சில மணி நேரமான குழந்தை ஒன்று கிடந்தது. வளர்ச்சி முழுமை அடையாத நிலையில் அந்த சிசு இறந்து இருந்தது.

பெண் பயணி ஒருவர் கழிவறையில் சிசுவை பெற்றெடுத்து வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் பயணிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனால் பெண் பயணிகள் விமானத்துக்குள்ளே வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விமானத்தில் பயணம் செய்த 19 வயது பெண் விளையாட்டு வீராங்கனை, தான் சிசுவை பெற்றெடுத்து கழிவறையில் வீசியதாக கூறினார். இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விமான நிலைய போலீஸ் அதிகாரி கூறுகையில், தீவிர விசாரணைக்கு பின் 19 வயது விளையாட்டு வீராங்கனை விமான கழிவறையில் குழந்தை பெற்று சிசுவை வீசியதை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏர் ஆசியா விமான நிர்வாகம் தரப்பில் கூறும் போது, “விமான கழிவறையில் சிசு வீசப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கர்ப்பம் அடைந்த 19 வயது பெண் அதை மறைப்பதற்காக சிசுவை வெளியே எடுத்து கழிவறையில் வீசி விட்டு தப்ப முடிவு செய்து இருப்பது தெரிய வந்தது. #AirAsia
Tags:    

Similar News