செய்திகள்

மோடி அறிவித்த ரூ.15 லட்சம் மக்களுக்கு கிடைத்து விட்டது: ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சொல்கிறார்

Published On 2018-07-18 04:25 GMT   |   Update On 2018-07-18 04:25 GMT
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.15 லட்சம் மக்களுக்கு கிடைத்து விட்டது என்று ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் தெரிவித்துள்ளார். #pmmodi #Rajasthanpartychief

புதுடெல்லி:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் அனைத்தும் மீட்கப்படும். மக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று கூறினார்.

நரேந்திர மோடியின் இந்த வாக்குறுதி பரபரப்பாக பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால், பாரதீய ஜனதா ஆட்சி உருவாகி 4 ஆண்டுகள் கடந்து விரைவில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சம் ஏன் வரவில்லை? என்று எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்காக கேள்வி விடுத்த வண்ணம் உள்ளன.

இது சம்பந்தமாக பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஏற்கனவே கூறும்போது, மோடி ஒரு பேச்சுக்காக இவ்வாறு கூறினார். கருப்பு பணத்தை கண்டிப்பாக மீட்போம் என்ற அடிப்படையில் இந்த வார்த்தை பேசப்பட்டது என்று மழுப்பலாக கூறினார்.

இதற்கிடையே ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் மதன்லால் சைனி பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சமும் வந்து விட்டது என்று கூறி இருக்கிறார்.

அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, பிரதமரின் ரூ.15 லட்சம் அறிவிப்பு தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பிரதமர் ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது.

ரூ.15 லட்சம் தருவேன் என்று சொன்னால் அதற்கான பணத்தை மக்களின் கையில் ரொக்கமாக தருவேன் என்று அர்த்தம் அல்ல. ரூ.15 லட்சத்தையும் ரொக்கமாக கையில் கொடுத்து எல்லோரையும் அம்பானியாக ஆக்க முடியாது.

பிரதமர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேற்பட்ட பலன்கள் கிடைத்துள்ளது.

அதன்படி பார்த்தால் பிரதமர் அறிவித்த பணம் மக்களுக்கு வந்து சேர்ந்து விட்டது என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று 2013 சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, எல்லோருக்கும் அரசு வேலை வழங்கிவிட முடியாது. ஆனாலும், பல்வேறு வகையில் நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம். 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை பெற்று விட்டார்கள் என்று அவர் கூறினார். #pmmodi #Rajasthanpartychief

Tags:    

Similar News