செய்திகள்

டெல்லியில் டிரைவிங் லைசென்ஸ், அரசு சான்றிதழ் வீடு தேடி வரும்- கெஜ்ரிவால் திட்டம்

Published On 2018-07-17 04:31 GMT   |   Update On 2018-07-17 04:31 GMT
டெல்லியில் அரசு சான்றிதழ்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கும் சேவையை கெஜ்ரிவால் அரசு தொடங்குகிறது. இந்த புதிய திட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி:

அரசு சான்றிதழ்களான பிறப்பு, இறப்பு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வாங்க அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும்.

ஆனால் சான்றிதழ்கள் உடனே கிடைப்பதில்லை. அதற்காக அலைய வேண்டியதுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் அரசு சான்றிதழ்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கும் சேவையை கெஜ்ரிவால் அரசு தொடங்குகிறது.

அதன்படி சாதி, டிரைவிங் லைசென்ஸ், அரசு சான்றிதழ்கள், மின்சார கட்டணம், குடிநீர் மற்றும் வீட்டு வரி உள்பட 100 வகையான சான்றிதழ்கள் வீட்டுக்கே சென்று வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

மொபைல் சகாயக் (மொபைல் நண்பர்) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திட்டத்தில் அரசு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சான்றிதழ் தேவைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

பின்னர் பொதுமக்கள் வீடு தேடி அரசு அலுவலர் செல்வார். அவர் டிஜிட்டல் முறையில் தேவையான ஆதாரங்களை பதிவு செய்து கொள்வார். அதன் பின் சான்றிதழ் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.


டிரைவிங் லைசென்ஸ் வாங்குபவர்கள் வாகன தேர்வுக்காக மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒருமுறை செல்ல வேண்டியது இருக்கும்.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:-

இந்த சேவை விடுமுறை நாட்களிலும் கிடைக்கும். இதனால் லஞ்சம் ஒழிக்கப்படும். இதன் பயன் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த மொபைல் நண்பன் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்றார்.

இத்திட்டம் ரூ.50 சேவை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன சான்றிதழ்களின் நகல் பெறும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. #ArvindKejriwal
Tags:    

Similar News