செய்திகள்

உ.பி. தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யும் 8-ம் வகுப்பு மாணவன்

Published On 2018-07-05 11:34 IST   |   Update On 2018-07-05 11:34:00 IST
உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 8-ம் வகுப்பு மாணவன் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ஆர்யான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு 8-ம் வகுப்பு மாணவன் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததுடன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் நோயாளிக்கு கம்பவுண்டரே மயக்க ஊசி செலுத்துகிறார். பின்னர் 13 வயது சிறுவன் வந்து அறுவை சிகிச்சை மேற்கொள்கிறான். அதை அருகில் நின்று அவனது தந்தை மேற்பார்வையிடுகிறார்.

இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி அசோக் குமார் ஹண்டா கூறுகையில், இங்கு சிறுவன் அறுவை சிகிச்சை மேற்கொள்வது இது முதல் முறையல்ல, அந்த ஆஸ்பத்திரியில் பார்வையாளர்கள் முன்னிலையில் அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. நர்சுகளும் கூட மயக்க மருந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

இதற்காக ஆர்யான் மருத்துவமனைக்கு 3 முறை சீல் வைக்கப்பட்டது. ஆனால் ஆஸ்பத்திரி நிறுவனர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் ஆஸ்பத்திரியை திறந்து விடுகிறார்.

கடந்த 1 ஆண்டில் மட்டும் இங்கு 24 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் 3 குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News