செய்திகள்

ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

Published On 2018-07-05 05:57 GMT   |   Update On 2018-07-05 05:57 GMT
ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. #SterlitePlant #NationalGreenTribunal
புதுடெல்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திடீரென்று ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜவாத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அதேசமயம், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு ஜூலை 17-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.  #SterlitePlant #NationalGreenTribunal
Tags:    

Similar News