செய்திகள்

இரும்பு ஆலைக்காக உண்ணாவிரதம் இருக்கும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கு கனிமொழி ஆதரவு

Published On 2018-06-26 13:34 GMT   |   Update On 2018-06-26 13:34 GMT
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைக்க தவறியதை கண்டித்து ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் தெலுங்கு தேசம் எம்.பி.யை இன்று சந்தித்த கனிமொழி ஆதரவு தெரிவித்தார்.
ஐதராபாத் :

ஆந்திரப்பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்னர் கடப்பா மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பிறகு ஆந்திராவில் இரும்பு ஆலை அமைக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், கடப்பா மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைப்பது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என மத்திய அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு இதை கூறியது.

இதற்கிடையே, இரும்பு ஆலை அமைக்கும் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய  மத்திய அரசு, உடனடியாக கடப்பாவில் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்குதேசம் கட்சி எம்.பி சி.எம்.ரமேஷ் என்பவர் கடப்பா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வரும் சி.எம்.ரமேஷ் எம்.பி.யை இன்று நேரில் சந்தித்தார். சந்திப்பின்போது, இரும்பு ஆலை அமைப்பது தொடர்பான அவரது போராட்டத்திற்கு கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜக கூட்டணியில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறியது. தற்போது, இந்த இரு கட்சிகள் இடையே கடப்பா இரும்பு ஆலை புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News