செய்திகள்

அமர்நாத் யாத்திரைக்கு அச்சுறுத்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகளை காஷ்மீர் கவர்னர் ஆய்வு செய்தார்

Published On 2018-06-23 17:44 IST   |   Update On 2018-06-23 17:44:00 IST
காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவர்னர் வோரா இன்று ஆய்வு செய்தார். #AmarnathYatra #Amarnathpilgrims #KashmirGovernor
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும். 

கடந்த வருடம் ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இம்மாதம் 28-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. எனவே, மீண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, காஷ்மீர் மாநிலத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள், ராணுவத்தினர், துணை ராணுவ படையினர் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் நோக்கத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மிகுந்த எச்சரிக்கை மற்றும் விழிப்புனர்வுடனும் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள உத்தம்பூர் பகுதிகளில் ராணுவத்தினர் முகாம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று பாகல்காம் பகுதிக்கு சென்ற கவர்னர் வோரா, அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பு தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  #AmarnathYatra #Amarnathpilgrims #KashmirGovernor
Tags:    

Similar News