செய்திகள்

2 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய 9 வயது சிறுமியை விருந்தளித்து பாராட்டிய மந்திரி

Published On 2018-06-22 15:23 GMT   |   Update On 2018-06-22 15:23 GMT
திரிபுராவில் மண்சரிவில் இருந்து ரெயிலை நிறுத்தி அதில் பயணம் செய்த 2000 பேரின் உயிரை காப்பாற்றிய பழங்குடி இனத்தை சேர்ந்த 9 வயது சிறுமி அம்மாநில மந்திரி விருந்தளித்து பாராட்டியுள்ளார். #Somati #Tripura #9yearoldSaviour

அகர்தலா:
 
திரிபுரா மாநிலம் தன்சேரா பகுதியை சேர்ந்தவர் சோமதி என்ற 9 வயது பழங்குடி இன சிறுமி. அவரின் குடும்பத்தினர் அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அம்மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவுகளால் பல இடங்களில் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. சிலர் உயிரிழந்துள்ளனர். தன்சேரா பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி சுமதி தனது தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுடன் தன்சேராவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் மூங்கில் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் தரம் நகரிலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவை பற்றி தகவல் தெரியாததால் அந்த ரெயில் அந்த வழியாக சென்றுள்ளது.


 
இதையடுத்து, ரெயில் வருவதை கவனித்த சிறுமி மற்றும் அவளது தந்தை இருவரும் உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி ரெயிலை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். இதை கவனித்த ரெயில் ஓட்டுனர் உடனடியாக ரெயிலை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 2000 மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. 

இந்த சிறுமி மற்றும் அவளது தந்தையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த சிறுமியின் தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுக்கு ரெயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.


 
இந்நிலையில், திரிபுரா மாநில சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி சுதிப் ராய் பர்மன் அந்த சிறுமி மற்றும் அவளது தந்தை ஆகியோரை தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டினர். அதோடு அவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்வித்தார்.  #Somati #Tripura #9yearoldSaviour
Tags:    

Similar News