செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கேரள முதல்-மந்திரிக்கு அனுமதி மறுப்பு

Published On 2018-06-22 05:13 GMT   |   Update On 2018-06-22 05:13 GMT
அரிசி ஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்ட கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

கம்யூனிஸ்டு ஆட்சி அங்கு அமைந்தபிறகு அரசியல் கட்சிகள் இடையே மோதல் போக்கும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பல இடங் களில் கொலையில் முடிந்து உள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முதல்-மந்திரி பினராயி விஜயனும் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் கேரளாவுக்கு மத்திய அரசு ஒதுக்கும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் அதிகரித்து வழங்க வேண்டும் என்று பினராயி விஜயன் மத்திய அரசை வற்புறுத்தி இருந்தார். மேலும் அரிசி ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு பினராயி விஜயன் பிரதமர் அலுவலகத்திற்கு சமீபத்தில் கடிதமும் எழுதியிருந்தார்.

தற்போது பினராயி விஜயன் பிரதமரை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு உள்ள கடிதத்தில் பிரதமரை பினராயி விஜயன் சந்திக்க தற்போது நேரம் ஒதுக்க முடியாது என்றும், அரிசி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக மத்திய உணவுத்துறை மந்திரியை சந்தித்து பேசுமாறும் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுவரை 3 முறை கேரள மாநில பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு கேரள அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமரை சந்திக்க பினராயி விஜயனுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News