செய்திகள்

காஷ்மீர் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி கொலை வழக்கில் ஒருவர் கைது

Published On 2018-06-15 14:59 GMT   |   Update On 2018-06-15 14:59 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி கொலை வழக்கில் தேடப்பட்ட ஒருவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #Bukharikilling #Policearrest
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.

ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் இருந்து நேற்று மாலை காரில் சென்றபோது, ஷுஜாத் புகாரியை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்கள் இருவரும் இறந்தனர். இந்த கொடூர படுகொலையில் பாகிஸ்தான் உளவுத்துறையின் கைவரிசை உள்ளதாக மத்திய மந்திரி ஆர்.கே. சிங் இன்று குறிப்பிட்டுள்ள நிலையில், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக தேடப்படும் 4 நபர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவனை இன்று மாலை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷுஜாத் புகாரியின் உதவியாளர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அவரது கைத்துப்பாக்கியை எடுத்துகொண்டு தப்பியோடிய நபரை வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் இன்று மாலை கைது செய்துள்ளதாக காஷ்மீர் மாநில போலீஸ் ஐ.ஜி. பானி தெரிவித்துள்ளார்.

ஷுஜாத் புகாரியின் உதவியாளர் வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு, கைதான நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Bukharikilling #Policearrest
Tags:    

Similar News