செய்திகள்

பாபா ராம்தேவுடன் பா.ஜ.க தலைவர் அமித்ஷா சந்திப்பு

Published On 2018-06-04 09:40 GMT   |   Update On 2018-06-04 09:40 GMT
பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆதரவுக்கான தொடர்பு எனும் பிரச்சாரத்திற்காக பாபா ராம்தேவை இன்று சந்தித்து பேசியுள்ளார். #AmitShah #Ramdev
புதுடெல்லி :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து ’’ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்தது. 

இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 1 லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மட்டும் 50 பேரை தனியாக சந்தித்து பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி அவர்களின் ஆதரவை கோர உள்ளார்.

அதனடிப்படையில், பதஞ்சலி நிறுவனதின் தலைவரும் யோகா துறையில் சிறப்பாக செயல்பட்டு வருபவருமான யோகா குரு பாபா ராம்தேவை அமித்ஷா இன்று புதுடெல்லியில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவையும் அமித்ஷா கோரியுள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதிகளான தல்பீர் சிங் சுஹாக் மற்றும் சுபாஷ் காஷ்யாப், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோரை அமித்ஷா ஏற்கெனவே சந்தித்து அவர்களின் ஆதரவை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. #AmitShah #Ramdev
Tags:    

Similar News