செய்திகள்

தடை பட்டியலில் சேர்க்கப்படும் முதல் நபர்: மும்பை கோடீசுவரருக்கு விமானத்தில் பறக்க தடை

Published On 2018-05-21 02:45 IST   |   Update On 2018-05-21 02:45:00 IST
விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய மும்பை கோடீசுவரர் சல்லாவுக்கு தற்போது விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. #Mumbai #JetAirways
புதுடெல்லி:

மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், கடத்தல்காரர்கள் இருப்பதாகவும், பொருட்கள் வைக்கும் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாகவும் எழுதப்பட்டு இருந்த துண்டுச்சீட்டு கண்டெடுக்கப்பட்டது. விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கொண்டு செல்லுமாறும் அதில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து விமானம் அவசரமாக ஆமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தியதில், மும்பையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரும், கோடீசுவரருமான பிர்ஜு கிஷோர சல்லா (வயது 37) என்பவரே இந்த மிரட்டலை விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

விமான பயணத்தில் தவறாக நடத்தல், பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பயணிகளுக்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கும் புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதில் 3 பிரிவுகளில் தடை அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், சல்லா ஏற்படுத்திய அச்சுறுத்தல் 3-வது பிரிவில் வருகிறது. இந்த பிரிவின் கீழ் ஒருவருக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் விமான பயணத்துக்கு தடை விதிக்கப்படும்.

இந்த விதிமுறைகளின்படி, விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சல்லாவுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான இந்த தடை பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ள முதல் நபர் சல்லா என்பது குறிப்பிடத்தக்கது.  #Mumbai #JetAirways
Tags:    

Similar News