செய்திகள்

சிக்கன நடவடிக்கை - குடிநீருக்கு கூட தடை போட்ட ரெயில்வே நிர்வாகம்

Published On 2018-05-19 11:03 GMT   |   Update On 2018-05-19 11:03 GMT
டெல்லியில் உள்ள ரெயில்வே பவன் தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், இனி வீட்டிலிருந்து குடிநீர் கொண்டுவர வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. #RailNeer
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் 15 ரூபாய் விலையில் ஒரு லிட்டர் குடிநீர் விற்கப்படுகிறது. ரெயில்வே துறை சார்பில் பல்வேறு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இந்த பாட்டில்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

டெல்லியில் உள்ள இந்திய ரெயில்வே தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த குடிநீர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

இதனால் ஏற்படும் செலவினங்களை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையால், இனி யாருக்கும் இலவசமாக குடிநீர் பாட்டில் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், பணிக்கு வருபவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து குடிநீர் கொண்டுவர வேண்டும் அல்லது அலுவலகத்தில் சில இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களில் இருந்து தண்ணீரை பிடித்து அருந்தி கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RailNeer
Tags:    

Similar News