செய்திகள்

எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி ஆசைகாட்டி பா.ஜனதா ரூ.100 கோடி பேரம் - குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2018-05-16 13:38 IST   |   Update On 2018-05-16 13:38:00 IST
கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி தருவதாகவும், ரூ.100 கோடி வரை ரொக்கமாக தருவதாகவும் ஆசை காட்டி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். #KarnatakaElection #Kumaraswamy
பெங்களூர்:

கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி காங்கிரசுடன் இணைந்தும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.

இந்த நிலையில் பெங்களூரில் இன்று மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக குமாரசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த முடிவை மாற்றுவது குறித்த கேள்விக்கே இடமில்லை.



பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. அந்த கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்.

மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடியும், 3 கேபினட் மந்திரி பதவியையும் பா.ஜனதா பேரம் பேசி வருகிறது. எங்கள் கட்சியை உடைக்க கருப்பு பணத்தை பயன்படுத்த முயற்சிக்கிறது.

அதிகாரத்துக்கு ஆசைப்படுவன் நான் இல்லை. எங்கள் குடும்பம் நாட்டு நலனுக்காக பிரதமர் பதவியை துறந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். குதிரை பேரம் நடைபெறுவதை வருமானவரித்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதா? ஜனாதிபதியும், கவர்னரும் தலையிட்டு குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்க வேண்டும்.

எங்கள் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை நீங்கள் இழுக்க முயன்றால் உங்களிடமிருந்து 2 பேரை நாங்கள் இழுப்போம். 10 பேரை இழுத்தால் 20 பேரை இழுப்போம்.

பா.ஜனதாவில் இருந்து 10 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் வரை எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எங்கள் அணிக்கு வர தயாராக இருக்கிறார்கள். “ஆபரே‌ஷன் கமலா” வெற்றிகரமாக நடந்ததை பா.ஜனதா மறந்து விடக் கூடாது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

அவரது இந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. #KarnatakaElection #Kumaraswamy
Tags:    

Similar News