செய்திகள்

கொசுக்கள் கடிக்கும் தலித் வீடுகளில் மந்திரிகள் தங்கி வருகின்றனர் - உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு

Published On 2018-05-04 18:24 IST   |   Update On 2018-05-04 18:24:00 IST
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கொசுக்கள் கடிக்கும் தலித் வீடுகளில் தங்கி மந்திரிகள் அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வருகின்றனர் என உ.பி. மந்திரி அனுபமா ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். #Uttarpradesh #Anupamajaiswal #Dalit
லக்னோ:

உத்தர பிரதேசத்தின் ஆரம்பநிலை கல்வி அமைச்சராக இருந்து வருபவர் அனுபமா ஜெய்ஸ்வால். இவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக தலைவர்கள் மற்றும் மந்திரிகள் தலித்  வீடுகளுக்கு சென்று வருகின்றனர். மத்திய அரசு அவர்களுக்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை அவர்களுக்கு விளக்கி வருகின்றனர். இதன் காரணமாக தலித் வீடுகளில் தங்கும் மந்திரிகள் அங்கு இரவு முழுவதும் கொசுக்கடியில் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு பணிகள் குறித்து விளக்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அலிகாரில் கட்சி நிகழ்ச்சிக்காக சென்ற மாநில மந்திரி சுரேஷ் ரானா தலித் வீட்டுக்கு சென்றார். அங்கு கொடுத்த உணவை சாப்பிடாமல் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதேபோல், தலித் வீடுகளுக்கு செல்லும் அரசியல்வாதிகள் அங்கு தயாரித்த உணவை சாப்பிடாமல், வெளியில் இருந்து ஆர்டர் செய்த உணவையே சாப்பிடுகின்றனர் என பா.ஜ.க. எம்.பி புலே குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த ஒரு வாரத்தில் தலித்துகள் பற்றி கருத்து தெரிவித்த மூன்றாவது பாஜக மந்திரி அனுபமா ஜெய்ஸ்வால் என்பது குறிப்பிடத்தக்கது. #Uttarpradesh #Anupamajaiswal #Dalit

Similar News