செய்திகள்

வேட்பாளருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள் - கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பு

Published On 2018-05-01 05:13 GMT   |   Update On 2018-05-01 05:13 GMT
கர்நாடக மாநிலம் மளவள்ளி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளருக்கு ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #KarnatakaAssemblyElections
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் களைகட்டியுள்ளது. வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்கள் வருகையின்போது அவர்களின் ஆதரவாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வரவேற்பு அளிக்கின்றனர்.

இந்நிலையில் மளவள்ளி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அன்னதானி, சமீபத்தில் தனது தொகுதியில் உள்ள பாலேஹன்னிகா கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரை மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். அப்போது குடங்களில் பால் கொண்டு வந்த ஆதரவாளர்கள் அதனை வேட்பாளர் அன்னதானி மீது ஊற்றி பாலாபிஷேகம் செய்தனர். மலர்களை தூவி, அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். பல லிட்டர் பாலை  வீணாக்கியது அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த வரவேற்பைத் தொடர்ந்து வேட்பாளர் அன்னதானி, அங்குள்ள கோவிலுக்கு வழிபடச் சென்றார். அப்போது அவரை காங்கிரஸ் கட்சியினர் வழிமறித்து எதிர்ப்பு கோஷமிட்டனர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன்பின்னரே வேட்பாளர் அன்னதானி கோவிலுக்கு சென்று பூஜை செய்தார். #KarnatakaAssemblyElections
Tags:    

Similar News