செய்திகள்

மராட்டியத்தில் கொதிக்கும் சர்க்கரைப்பாகில் விழுந்து 3 வயது சிறுமி பலி

Published On 2018-05-01 01:19 GMT   |   Update On 2018-05-01 01:19 GMT
மராட்டியத்தில் கொதிக்கும் சர்க்கரைப்பாகில் விழுந்த 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் வெந்துபோனதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நாசிக்:

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் பஞ்சவட்டி ஹிராவாடி பகுதியை சேர்ந்தவர் ஷிரோடு, சமையல்காரர். இவரது மகள் ஸ்வரா (வயது 3). சம்பவத்தன்று ஷிரோடு தொழில் நிமித்தமாக குலோப்ஜாமுன் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தார். இதற்காக அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் சர்க்கரைப்பாகு தயாரித்து வைத்திருந்தார். இந்த பாகு நல்ல கொதிநிலையில் இருந்தது.

அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த ஸ்வரா எதிர்பாராதவிதமாக சர்க்கரைப்பாகு வைத்திருந்த பாத்திரத்துக்குள் விழுந்தாள். இதில் அவள் அலறி துடித்தாள். உடல் வெந்த நிலையில் அவள் உயிருக்கு போராடுவதைக்கண்டு பதறிய குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு அருகே இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் முழுவதும் வெந்துபோனதால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தாள்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News