செய்திகள்

வெடிகுண்டு புரளியால் கொல்கத்தா விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

Published On 2018-03-28 14:29 GMT   |   Update On 2018-03-28 14:29 GMT
வெடிகுண்டு புரளியால் கொல்கத்தா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என விமான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் ஏ.ஐ.-020 என்ற ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 248 பயணிகள் மற்றும் 11 விமான நிறுவன ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் பறந்து கொண்டிருந்த சிறிது நேரத்தில் மும்பை விமான நிலையத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியவர் டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனக்கூறி அழைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, அவர்கள் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் விமானியை தொடர்பு கொண்டனர். விமானத்தை டெல்லியில் அவசரமாக தரையிறக்கும்படி அறிவுறுத்தினர். இதனால் கொல்கத்தா செல்ல வேண்டிய விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு வேறு விமானத்தில் கொல்கத்தாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானத்தை சோதனை செய்ததில் வெடிகுண்டு புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு சோதனைக்காக டெல்லி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News