செய்திகள்

ரூ.11,400 கோடி மோசடி - பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் 2 அதிகாரிகளிடம் விசாரணை

Published On 2018-02-25 13:08 IST   |   Update On 2018-02-26 15:05:00 IST
பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.11,400 கோடி மோசடி தொடர்பாக வங்கி அதிகாரிகள் 2 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. #NiravModi #PNBFraudCase
மும்பை:

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் நடந்த ரூ.11,400 கோடி மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், மாமா மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ. கடந்த மாதம் 31-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதேபோல அமலாக்கத் துறையினரும் விசாரணை செய்து நாடு முழுவதும் சோதனை நடத்தினர். நிரவ் மோடியின் சொத்துக்கள், சொகுசு கார்கள், பொருட்கள், உள்பட அனைத்தும் முடக்கப்பட்டன.



பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையின் அதிகாரிகள் உடந்தையால் இந்த மோசடி நடந்ததை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த மோசடி தொடர்பாக 6 வங்கி ஊழியர்கள் உள்பட 14 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுசின் கிளையின் பொது மேலாளர் ராஜேஷ் ஜிண்டல் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் தலைமை மேலாளர் பெச்சுதிவாரி, மானேஜர் யஷ்வந்த் ஜோஷி, ஊழியர் மனோஜ் கரத், ஏற்றுமதி அதிகாரி புரபுல் சாவத் ஆகியோர் கைதாகி இருந்தனர்.

இந்த நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனில்மேத்தா, செயல் இயக்குனர் கே.வி. பிராம்ஜ்ராவ் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இருவரும் மும்பை வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:-

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மிக முக்கிய 2 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடன் அனுமதி, கடிதங்களை ஆய்வு செய்தல், அதிகபட்ச கடனுக்கு முக்கிய நிர்வாகத்தின் பங்களிப்பு உள்பட பல வி‌ஷயங்கள் குறித்து அவர்களிடம் விசாரிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். #NiravModi #PNBFraud #PNBScam #PNBFraudCase

Similar News