செய்திகள்

இனி அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்க தேர்தல் பத்திரங்கள் தயார்

Published On 2018-02-22 14:39 GMT   |   Update On 2018-02-22 14:39 GMT
அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக கொடுக்க வகை செய்யவும், அதற்கு மேலான தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நமது நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நன்கொடைகள் வழங்குவதில் வெளிப்படையான தன்மை கிடையாது. யார் வேண்டுமானாலும், எந்த அரசியல் கட்சிக்கும் எவ்வளவு பெருந்தொகையையும் தேர்தல் நிதியாக வழங்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.

வருமான கணக்கில் காட்டாத பணத்தை, அரசியல் கட்சிகளுக்கு கருப்பு பண முதலைகள் நன்கொடை என்ற பெயரில் வாரி வழங்கிவிட்டு, தாங்கள் நிதி அளித்த கட்சி ஆட்சிக்கு வருகிறபோது, சலுகைகள் பெற இது வசதியாக அமைகிறது. ஊழலுக்கும் வழிவகுக்கிறது.

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், எந்த ஒரு அரசியல் கட்சியும், யாரிடம் இருந்தும் ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற முடியும். யார், கூடுதல் தொகை நன்கொடை வழங்க வேண்டும் என்றாலும் அதை தேர்தல் பத்திரங்களாக வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் மார்ச் முதல் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கியில் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு வருகின்றது. 1 முதல் 10-ம் தேதி வரை இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இ

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்காக ரூ.1,000, ரூ.10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு வருகிறது.

* தேர்தல் பத்திரங்களின் காவலனாக பாரத ஸ்டேட் வங்கி செயல்படும். பத்திரம் என்று இது அழைக்கப்பட்டாலும்கூட, அரசியல் கட்சிகளுக்கு உரிய பணம் போய்ச்சேருகிற வரையில், இது வட்டியில்லா கடன் ஆவணங்களாக (‘பிராமிசரி நோட்டு’ என்று அழைக்கப்படுகிற கடனுறுதி சீட்டு வடிவில்) இருக்கும்.

* தேர்தல் பத்திரங்களின் ஆயுள்காலம், வெறும் 15 நாட்கள் மட்டுமே. அந்த கால கட்டத்திற்குள், பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி விட வேண்டும். பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டில் மட்டும் இந்த 15 நாட்கள் அவகாசம், 30 நாட்களாக கொள்ளப்படும்.

* தேர்தல் பத்திரங்களை பெறுகிற அரசியல் கட்சிகள், உரிய வங்கி கணக்கின் மூலம்தான் வங்கியில் செலுத்தி, அவற்றை பணமாக்கிக்கொள்ள முடியும்.

* தேர்தல் பத்திரங்களில் யார் பணம் செலுத்தி அவற்றை வாங்குகிறார்களோ, அவர்களது பெயர் குறிப்பிடப்பட மாட்டாது. ஆனால், அவற்றை யார் வாங்குகிறார்களோ, அவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை (கே.ஒய்.சி.) அந்த பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தெரிவிக்க வேண்டும்.

* இந்திய குடிமக்களும், இந்தியாவில் பதிவு செய்த அமைப்புகளும் இந்த பத்திரத்தை வாங்குவதற்கு தகுதி படைத்தவர்கள்.

* தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள், அதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் கணக்கு காட்ட வேண்டும்.

இப்படி தேர்தல் பத்திரங்கள் வாயிலாகத்தான் அரசியல் கட்சிகளுக்கு பெருந்தொகைகளை நிதியாக வழங்க முடியும் என்கிறபோது, அவற்றுக்கு நிதி அளிப்பதில் வெளிப்படைத்தன்மை வந்து விடும். கருப்பு பணத்தை அரசியல் கட்சிகளுக்கு யாரும் வாரி வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #TamilNews
Tags:    

Similar News