செய்திகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: மோடி பேச்சு

Published On 2018-02-04 18:42 IST   |   Update On 2018-02-04 18:42:00 IST
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக பெங்களூரு நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Karnatakagovt #congress #pmmodi
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபைக்கு வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியை தக்கவைத்துகொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், பெங்களூரு நகரில் உள்ள அரண்மனை திடலில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக குறிப்பிட்ட அவர். கிரிமினல்களின் ராஜ்ஜியமாக மாறிவிட்ட காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக மாநிலம் ஊழலில் புதிய சாதனை படைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக எனது தலைமையிலான மத்திய அரசு அறிவித்த எந்த நலத்திடங்களையும் கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தையும் மாநில அரசு தவறான வகையில் பயன்படுத்தி கொண்டது என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலின் மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கு விடையளிக்கும் நேரம் வந்து விட்டது. அடுத்து இங்கு அமையும் பா.ஜ.க. ஆட்சி கர்நாடகத்தை புதிய உயரத்தை நோக்கியும், முன்னேற்றத்தை நோக்கியும் வழிநடத்தி செல்லும். விவசாயிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மற்றும் நடுத்தரப்பிரிவு மக்களின் மீது தனிக்கவனம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார். #tamilnews #Karnatakagovt #congress #pmmodi

Similar News