செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ரவுடிகளை ஒழிக்க 900 என்கவுண்டர்

Published On 2018-02-04 14:48 IST   |   Update On 2018-02-04 16:35:00 IST
உத்தரபிரதேசத்தில் ரவுடிகளை ஒழிக்க கடந்த 48 மணி நேரத்தில் 19 என்கவுண்டர்கள் நடந்துள்ளது. மாநிலம் முழுவதும் 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. கடந்த மார்ச் 19-ந்தேதி யோகி ஆதித்யநாத் முதல்- மந்திரியாக பொறுப் பேற்றார்.

யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற உடன் சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

உத்தரபிரதேசத்தில் பதுங்கி உள்ள குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அல்லது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் மாநிலம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

அங்கு கடந்த 48 மணி நேரத்தில் 19 என்கவுண்டர்கள் நடக்கிறது. மாநிலம் முழுவதும் 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 10 மாதத்தில் மட்டும் உத்தரபிரதேசத்தில் 900 என்கவுண்டர்கள் நடந்துள்ளது.

இதில் 34 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 200 பேர் காயம் அடைந்தனர். இதேபோல் போலீஸ் தரப்பில் 4 பேர் உயிர் தியாகம் செய்து இருந்தனர்.

உத்தரபிரதேசத்தில் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரிக்கப்படுவது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் ஏராளமான நோட்டீசுகள் அனுப்பி உள்ளன.

இதுகுறித்து போலீஸ் ஏ.டி.ஜி. ஆனந்தகுமார் கூறும்போது, “ஒவ்வொரு எண்கவுண்டர் குறித்தும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது” என்றார். #tamilnews

Similar News