செய்திகள்
சம்பவம் நடந்த இடத்தில் கூடியுள்ள போலீசார்

பஞ்சாப்: கல்லூரி மாணவர்கள் போராட்டம் - துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் டி.எஸ்.பி பலி

Published On 2018-01-29 12:22 GMT   |   Update On 2018-01-29 12:22 GMT
பஞ்சாப் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்தச் சென்ற போலீஸ் டி.எஸ்.பி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் பரித்கோட் அருகே உள்ள ஜைட்டுவில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் இருவரை சில தினங்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், கொந்தளித்த மாணவர்கள் இன்று கல்லூரி திறந்ததும் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தை கட்டுப்படுத்த டி.எஸ்.பி பால்ஜிந்தர் சிங் சந்து தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த பதற்றமான சூழலில் திடீரென துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டுள்ளது.

அப்போது, ரத்த வெள்ளத்தில் டி.எஸ்.பி பால்ஜிந்தர்சிங் சந்து கிடந்துள்ளார். அவருடைய பாதுகாவலர் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை அடுத்து உடனேயே டி.எஸ்.பி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது பாதுகாவலர் உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டி.எஸ்.பி சந்துவின் உடலுக்கு போலீஸ் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் இரங்கல் மற்றும் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News