செய்திகள்

கைவிரல் ரேகைகள் தேய்வதால் ஆதாரில் முக அடையாளத்தை வைத்து சரிபார்க்கும் வசதி

Published On 2018-01-15 20:00 GMT   |   Update On 2018-01-15 20:00 GMT
ஆதாரில், முக அடையாளத்தை வைத்து பயனாளிகளை சரிபார்க்கும் வசதி ஜூலை 1-ந் தேதி அறிமுகம் ஆகிறது. #UIDAI #AadharrCard
புதுடெல்லி:

ஆதாரில், முக அடையாளத்தை வைத்து பயனாளிகளை சரிபார்க்கும் வசதி ஜூலை 1-ந் தேதி அறிமுகம் ஆகிறது.

நாடு முழுவதும் வங்கி கணக்கு, பான் எண், செல்போன் எண், கிரெடிட் கார்டு எண் போன்றவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மானியம் உள்ளிட்ட சமூகநல திட்டங்களின் பயன்கள், உரிய நபரை சென்றடைவதற்கும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில், ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.



ஆதார் எண் பெற புகைப்படம் எடுக்கும்போது, ஒவ்வொருவரது கண்ணின் கருவிழி, கைவிரல் ரேகை ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்த கருவிழி மற்றும் விரல் ரேகையை வைத்தே ஒருவரைப் பற்றிய விவரங்களை சரிபார்த்து வருகின்றன.

ஆனால், இவற்றில் புதிதாக சிக்கல்கள் தோன்றி உள்ளன. சிலரது விரல் ரேகைகள் தேயத் தொடங்கி வருகின்றன. மூத்த குடிமக்களுக்கும், கடின உழைப்பாளிகளுக்கும் இந்த பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர்களின் விரல் ரேகைகள், ஆதாரில் உள்ள விரல் ரேகைகளுடன் ஒத்துப்போகாமல் உள்ளன. சிலர், போலியான விரல் ரேகைகளை பயன்படுத்தி, ஆதார் எண் பெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக, முக அடையாளத்தை வைத்து ஒருவரை சரிபார்க்கும் வசதி அறிமுகம் ஆகிறது. ஆதார் எண் வழங்கும் ‘இந்திய தனித்துவ அடையாள ஆணையம்’ (உதய்), ஜூலை 1-ந் தேதி முதல் இந்த வசதியை அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து ‘உதய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மூத்த குடிமக்கள், கடின உழைப்பாளிகள் போன்றவர்கள் கைவிரல் ரேகை தேய்வதால் பிரச்சினையை சந்திக்கின்றனர். ஆகவே, முக அடையாளத்தையும் பயன்படுத்தி, ஒருவரை சரிபார்க்கும் வசதி ஜூலை 1-ந் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஆனால், மற்ற அடையாளங்களான கருவிழி, விரல் ரேகை, பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் ரகசிய குறியீட்டு எண் (ஓ.டி.பி.) பெறுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் சேர்த்தே முக அடையாளத்தையும் சரிபார்க்க அனுமதிக்கப்படும்.

தேவை அடிப்படையில் இதற்கு அனுமதி வழங்கப்படும். எல்லா குடிமக்களும் இதை கூடுதல் வாய்ப்பாக பயன்படுத்தலாம். ஆதார் பதிவின்போது எடுக்கப்படும் புகைப்படமே இந்த சரிபார்ப்புக்கு பயன்படுத்தப்படும்.

இந்த வசதியை அறிமுகப்படுத்துவதற்காக, உரிய தொழில்நுட்ப மாறுதல்கள் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #UIDAI #AadharrCard  #tamilnews 
Tags:    

Similar News